Saturday, March 20, 2010

மண்ணுயரம் கூட மலையுயரம்

வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.
கவிஞாயிறு  தாராபாரதி படைப்புகள் நாட்டுடைமையானதை அறிந்து என்னோடு தொடர்பு கொண்டு,மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொண்ட,
அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதய நன்றி..

தாராபாரதியின்  தன்னபிக்கை கவிதை ஒன்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மகிழ்கிறேன்...

இளைஞனே!
வீட்டுக்கு உயிர்வேலி ,
வீதிக்கு விளக்குத்தூண்;
நாட்டுக்குக் கோட்டைமதில்,
நடமாடும் கொடிமரம் நீ!

தேசியக் கொடிவிற்றுத்
தின்பண்டம் திரட்டுகிற
மோசடியை முறியடிக்க
முழங்கிவா இளம்புயலே!

புது வேகத்தோடு
புறப்படு! உன் உள்ளங்கை
விதிரேகை என்பதை
விஞ்ஞான  ரேகையாக்கு!

செவ்வாயில் செங்கரும்பு
சீக்கிரமாய் முளைக்கச்செய்!
எவ்வாய்க்கும்  நிலாச்சோறு
இன்றைக்கே கிடைக்கச் செய்!

உன்எடைக்கு முன்னே
உமிஎடைதான் இமயமலை;
உன்நடைதான்  இன்றுமுதல்
உலகநடை; எழுந்துநட

உன்னுயரம் தெரியமால்
உணர்வின்றிக் கிடப்பதனால்
மண்ணுயரம் அதுகூட
மலையுயரமாய்த் தெரியும்!

என்னுயரம் இதுவென்று
எழுந்துநில்! அப்போது
விண்ணுயரம் கூட உன்
விலாவுக்குக் கீழேதான்!

தசைகளுக்குக் கொஞ்சம்
தன்மானப் பயிற்சிகொடு
திசைகளைத் திருத்திநீ
தேசத்தைப் புதிதாக்கு!
- தாராபாரதி

2 comments:

  1. அன்பு இனியவன் அவர்களுக்கு - வணக்கம் .
    தங்கள் செய்தி பார்த்து வலை தளம் வந்தேன் .
    அருமை . தாராபாரதி கவிதைகளை மீண்டும்
    படித்து மகிழ்ந்தேன் . அடிக்கடி காண்பேன்.
    நன்றி . -- புதுவை சந்திரஹரி .

    ReplyDelete
  2. இலக்கியவீதி இனியவன்
    ( இனிய நினைவுகள் )
    பாண்டியன் ஜி
    கடந்த ஜுலை மாதம் 18 ஆம தேதி தினமணி நாளிதழில் வெளியான ஓர் செய்தி என் நினைவுகளை பெரிதும் பின்னோக்கிச் செல்ல உதவியது.
    1959 என்று நினைக்கிறேன்........
    http://verhal.blogspot.com

    ReplyDelete